இந்தியா

கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.4.15 லட்சம் கோடி தங்கம் இறக்குமதி செய்தது இந்தியா

செய்திப்பிரிவு

மும்பை: கடந்த ஆண்டில் இந்தியாவில் 5,570 கோடி டாலருக்கு (சுமார் ரூ.4.15 லட்சம் கோடி) வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தங்கம் விலை சற்று சரிந்ததால் முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிக எடையிலான தங்கம் இந்தியாவுக்குள் வந்துள்ளது.

2020-ம் ஆண்டில் கரோனா பாதிப்பு தீவிரம் காரணமாக ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள் தள்ளிப்போடப்பட்டன. இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நடைபெற்றதால் தங்கம் அதிகஅளவில் உள்நாட்டில் வாங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் அதிக அளவில் தங்கம் நுகரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

2021-ம் ஆண்டு 2,200 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதிசெய்யப்பட்டது. 2011-ல் தங்கஇறக்குமதிக்கு செலவிடப்பட்ட தொகை 5,390 கோடி டாலராகும்.இதுதான் அதிகபட்ச அளவாக இருந்தது. ஆனால் அந்த அளவுகடந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 1,050 டன்னாகும். கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 430 டன்னாகும்.

2020-ம் ஆண்டு இந்தியாவில் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் தங்கம் வாங்குவது பெரிதும் குறைந்தது. திருமண நிகழ்வு மற்றும் அட்சய திருதியை போன்ற காலங்களில்தங்கம் வாங்குவதும் பாதிக்கப்பட்டது. மணப்பெண்ணுக்கு வரதட்சினையாக தங்கம் அளிக்கும் பழக்கம் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. மேலும் திருமண நிகழ்வில் தங்கம் பரிசளிப்பதும் அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை சற்று சரிந்திருந்ததால் அதிக அளவில் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.56,191 ஆக உயர்ந்தது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது ரூ.43,320 ஆகக் குறைந்தது. இந்த கால கட்டத்தில் மட்டும்177 டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT