இந்தியா

அதிகரிக்கும் கரோனா தொற்றால் மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி: பயோ மெட்ரிக் பதிவு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய உதவும் பயோ மெட்ரிக் பதிவு வரும் 31-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த தகவலை மத்திய பிரதமர் அலுவலகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கான பயோ மெட்ரிக் பதிவு நடைமுறை அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ரத்து செய்யப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அரசு ஊழியர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், ஊழியர்கள் வருகைப் பதிவேட்டில் தங்களுடைய வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஊழியர்கள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருத்தல் உள்ளிட்டகரோனா பாதுகாப்பு நடைமுறையை முழுமையாக பின்பற்றுவதை அந்தந்த துறைத் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு விலக்கு

மேலும் மத்திய அரசு அலுவலகங்களில் சார்புநிலைச் செயலாளர்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்களில் 50% பேர் அலுவலகத்திலும் எஞ்சிய50% பேர் வீடுகளில் இருந்தும் பணிபுரியலாம் என மத்திய அரசு அனுமதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளி பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கரோனாகட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில்வசிக்கும் அதிகாரிகள், பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

அலுவலக நேரம் மாற்றம்

அதேபோல் மத்திய அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்கஅலுவல் நேரங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பிடிஐ

SCROLL FOR NEXT