இந்தியா

அகிலேஷ் சிங் யாதவை கிருஷ்ணர் சபித்திருப்பார்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் விமர்சனம்

செய்திப்பிரிவு

லக்னோ: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவை, பகவான் கிருஷ்ணர் சபித்திருப்பார் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, "பகவான் கிருஷ்ணர் எனதுகனவில் வந்து சமாஜ்வாதி ஆட்சிஅமைக்கும் என்று ஆசி வழங்கினார். சோசலிசம்தான் உண்மையான ராம ராஜ்ஜியம்" என்றார்.

இதுகுறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலிகரில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசியதாவது:

பகவான் கிருஷ்ணர் கனவில் வந்ததாக சிலர் கூறியுள்ளனர். நிச்சயமாக அவர்களை கிருஷ்ணர் சபித்திருப்பார். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது மதுரா, பிருந்தாவனம், பார்சனா, கோகுல் பகுதிகளுக்காக எதுவுமே செய்யவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது வன்முறையை தூண்டிவிட்டனர். தீவிரவாதிகளை விடுதலை செய்தனர்.

தற்போது பாஜக ஆட்சியில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர்கோயில் கட்டப்படுகிறது. முந்தைய ஆட்சியில் ராமர் கோயில் கட்டஎவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்காக பாஜகவிடம் மன்னிப்பு கோருமாறு பகவான் கிருஷ்ணர் கண்டித்திருப்பார்.

கடந்த ஆட்சி காலத்தில் ராமஜென்ம பூமி, நீதிமன்றங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போதைய முதல்வரின் (அகிலேஷ்) இல்லத்துக்கு தீவிரவாதிகள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தற்போது பாஜக ஆட்சியில் தீவிரவாதிகள் தலைதெறிக்க ஓடுகின்றனர்.

முந்தைய ஆட்சியில் பல்வேறுவழக்குகளில் இருந்து தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது பாஜக ஆட்சியில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

உத்தரபிரதேச அமைச்சர் சித்தார்த் நாத் கூறும்போது, "அகிலேஷ் யாதவ் அண்மைக் காலமாக பாபர், ஜின்னாவின் பெயர்களை கூறிவந்தார். தற்போது கிருஷ்ணர் கனவில் வந்ததாக கூறுகிறார். வரும் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT