கொச்சி: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
கேரள பல்கலைக்கழகங்களில் அரசியல் ரீதியாக நியமனங்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டி, முதல்வருக்கு ஆளுநர் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று கொச்சியில் செய்தியாளர்களுக்கு பதில்அளிக்கும்போது, “இப்பிரச்சினைக்கு மிகவும் எளிதான தீர்வு உள்ளது. சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை அவர்கள் (அரசு) கூட்டலாம். முதல்வரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிக்கலாம். அல்லது இதற்காக ஓர் அவசரச் சட்டத்தை அரசு கொண்டு வரலாம். அவ்வாறு கொண்டு வந்தால் அதில் கையெழுத்திட நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “நிச்சயமாக ஒரு விஷயம் நடந்தது. அது, வேந்தர் பொறுப்பில் தொடர வேண்டாம் என முடிவு செய்ய வைத்தது. ஆனால் இதுபற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இது தேசிய நிறுவனங்கள் தொடர்பானது. நான் அதிகாரங்களை கேட்கவில்லை. வேந்தராக பணியாற்றுவது சிரமமாக உள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள் என்று தான் கேட்கிறேன்” என்றார்.