பெங்களூரு: அரசு பணியில் நுழைந்தவுடன் பலரின் குடும்பம் ‘திடீர்' பணக்காரர்களாக மாறி அடுக்குமாடிகளில் வாழும் காலத்தில், ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் பெற்றோர் இன்னும் செல்போன் டவர் கிடைக்காத குக்கிராமத்தில் தகர கொட்டகையில் வசிக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள காக்வாட் அருகே மோல் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் காந்த் (63). அடிப்படை வசதிகள் இல்லாத இந்த கிராமத்தில் தன் மனைவி சாவித்ரி (53) உடன் வசித்து வருகிறார். கர்நாடக கூட்டுறவு சங்கத்தின் சர்க்கரை ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் காந்த்துக்கு 4 பிள்ளைகள். தனது கடுமையான உழைப்பின் மூலம் காந்த் உள்ளிட்ட 4 பேரையும் அரசு பணியில் அமர்த்தி இருக்கிறார்.
அதில் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரிஜெகதீஷ் அடஹள்ளி. 2019-ம்ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்த இவர் தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்ட காவல் துறையில் உயர் பொறுப்பில் இருக்கிறார். இவரது சகோதரர் மத்திய அரசு பணியிலும், சகோதரிகள் இருவர் அரசு பள்ளி ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
4 பிள்ளைகளும் அரசு வேலையில்
தனது பிள்ளைகள் 4 பேரையும் அரசு ஊழியர்களாக மாற்றிய காந்த் இன்னமும் தனது ஓட்டுநர் பணியை தொடர்கிறார். அதுவும் 4 பேரும் பிறந்து வளர்ந்த அதே தகர கொட்டகையில் வசித்து வருகிறார். இதுகுறித்து காந்த் கூறும்போது, ‘‘நான் மிகவும் கஷ்டப்பட்டு பலரிடம் கடன் வாங்கி எனது பிள்ளைகளை படிக்க வைத்தேன். நால்வரும் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில்தான் படிக்க வைத்தேன்.ஜெகதீஷ் அடஹள்ளி படிப்பில் சுட்டியாக இருந்தார். அவர் பட்டய கணக்காளராக ஆக்க வேண்டும் என விரும்பியதால் பி.காம் படித்தார்.
2013-ம் ஆண்டு நான் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருக்கு வாகனம் ஓட்டினேன். அவர் மூலமாகஐஏஎஸ் தேர்வு பற்றி கேள்விப்பட்டேன். இதுகுறித்து ஜெகதீஷ் அடஹள்ளியிடம் கூறி அந்த தேர்வை எழுதுமாறு அறிவுறுத்தினேன்.
எனது ஆசையை புரிந்துகொண்டு ஜெகதீஷ் அடஹள்ளி கேபிஎஸ்சி தேர்வு எழுதினார். அதில் கர்நாடக அளவில் 23-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார். அரசு பணியில் இருந்துகொண்டே யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார். ஆனால் உடனடியாக வெற்றி பெற முடியாததால், அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, டெல்லி சென்று படித்தார். 2019-ம் ஆண்டு தேசிய அளவில் 440-வது இடத்தை பெற்று, தேர்வில் வெற்றி பெற்றார்.
நாங்கள் வாழ்க்கையில் நிறைய வறுமையை பார்த்துவிட்டோம். அந்த வறுமைதான் எங்களை வலிமை ஆக்கியது. அந்த வறுமைதான் எங்களை எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என உணர்த்தியது. இப்போது வருமானம் அதிகரித்து விட்டதால் ஆடம்பர வாழ்க்கைக்கு மாறிவிடுவது சரியாக இருக்குமா? மகன் ஐபிஎஸ் அதிகாரி ஆகிவிட்டால் மாளிகைக்கு மாறிவிட வேண்டுமா?
எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கும் வரை ஓட்டுநர் பணியில் தொடர்வேன்'' என்றார்.