லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும், சமாஜ்வாதி கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கடவுள் கிருஷ்ணர் தினசரி என் கனவில் வந்து தெரிவிக்கிறார் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவைக் கிண்டல் செய்யும் விதமாகத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப்போகும் கட்சி யார் என்பதைத் தீர்மானிக்கும் மாநிலமாக உ.பி.பார்க்கப்படுவதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கப் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த 2 ஆண்டுகளாக உ.பி.யில் முகாமிட்டு மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார். ஆட்சியை இழந்த சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப் போராடி வருகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் தன் பங்கிற்கு காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில் பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்நாத் சிங் சமீபத்தில் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், “மதுராவில் போட்டியிட யோகி ஆதித்யநாத்துக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும். கடவுள் கிருஷ்ணர் என் கனவில் வந்து, உ.பி. முதல்வர் மதுராவில் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் எனத் தெரிவித்தார். இதற்கேற்ப யோகி ஆதித்யநாத்தும், கட்சி உத்தரவிடும் எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார்'' என்று தெரிவித்திருந்தார்.
இதைக் கிண்டல் செய்யும் விதமாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று பேசியுள்ளார். அவர் கூறுகையில், “யோகி ஆதித்யநாத் தோற்றுவிட்டார். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. ஒவ்வொரு நாள் இரவிலும் கடவுள் கிருஷ்ணர் என்னுடைய கனவில் வந்து, சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபின் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிதான் ஆட்சியமைக்கும் என்று கூறுகிறார்” எனத் தெரிவித்தார்.