பிரதமர் மோடி, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி | கோப்புப் படம் 
இந்தியா

பிரதமர் மோடி விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இல்லை: பிரச்சினைகளைப் பட்டியலிட்டு ஒவைசி சாடல்

ஏஎன்ஐ

ஹைதராபாத்: "பிரதமர் மோடி விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு தயாராக இல்லை; அவர் புகழ்ச்சியை கேட்கவே விரும்புகிறார்" என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி சாடியுள்ளார்.

மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று அளித்த பேட்டியில், “பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியபோது, விவசாயிகள் பிரச்சினைகளைப் பற்றி ஆலோசித்தேன், இறுதியில் மோடியுடனான சந்திப்பு சண்டையில்தான் முடிந்தது” எனத் தெரிவித்தார். மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியது குறித்து ஏஐஎம்ஐஎம்கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி ஹைதராபாத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, "சத்யபால் மாலிக் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருக்கிறார், மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர், அரசியலமைப்புச் சட்ட பதவியில் இருக்கிறார். அவர் சொல்வதை நம்பாமல் இருக்க முடியாது, குறைந்தபட்சம் அவரின் வார்த்தைகளை நம்ப வேண்டும். பிரதமர் மோடி உண்மையைக் கேட்கத் தயாராக இல்லை என்று ஆளுநரே தெரிவிக்கிறார். உங்களால்தான் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்தார்கள் என ஆளுநர் சத்யபால் கூறியபோது மோடி கோபமடைந்துள்ளார்.

உண்மையை ஏற்றுக்கொள்ள பிரதமர் மோடி தயாராக இல்லை. இதன்மூலம் பிரதமர் மோடியின் ஆணவம் வெளிப்படுகிறது. சர்வாதிகாரி போல் செயல்படும் மோடி, புகழ்ச்சியையும் பாராட்டுகளையும் மட்டுமே கேட்க விரும்புகிறார்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு முக்கியக் காரணம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திப்போம் என நினைத்ததால்தான். சட்டத்தை திரும்பப் பெற்றதற்கு முழுக் காரணம் அரசியல் நிர்பந்தம், அழுத்தம் மட்டும்தான். நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவது, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற கசப்பான உண்மைகளையாவது மோடி கவனிப்பார் என நம்புகிறேன்.

நம்முடைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சீன ராணுவம் கட்டிடங்களை கட்டி ஆக்கிரமித்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சீன ராணுவம் ஆயுதங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது. இது மிகவும் தீவிரமான விஷயம், இந்த விவகாரத்தை பற்றி விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில் சீன ஆக்கிரமிப்பு, எல்லைப் பிரச்சினை, மத்திய அரசின் பதில் ஆகியவற்றை அறிய வேண்டும்.

எல்லையில் புதிதாக கிராமங்களை சீன ராணுவம் உருவாக்கி வருகிறது. இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வருகின்றன, எம்.பி.க்கள் கடிதம் எழுதிவிட்டார்கள். ஆனால், நம் ராணுவம் சீன ராணுவத்துக்கு இனிப்புகளை வழங்கி வருகிறது. லடாக் பகுதியில் சீன ராணுவம் இன்னும் 60,000 ராணுவ வீரர்களை குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றார் ஒவைசி.

SCROLL FOR NEXT