மும்பை: முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் அவர்களுக்குத் தெரியாமல் பதிவிட்டு, அவர்களை ஏலமிடும் 'புல்லிபாய்' செயலி குறித்த புகாரில் பெங்களூரைச் சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மாணவரின் வயது, படிப்பு ஆகியவற்றைக் காரணம்காட்டி பெயர், அடையாளங்களை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.
முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு, அவர்களை ஏலம் விடும் 'புல்லிபாய்' ஆப்ஸ் குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸிலும், டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர், டெல்லி போலீஸிலும் புகார் செய்திருந்தனர். இரு நகரங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
இதுபோன்ற சம்பவம் கடந்த ஆண்டு டெல்லியிலும், உ.பி.யிலும் நடந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது ஆனால், பெரிதாக நடவடிக்கை ஏதுமில்லை. இதைச் சுட்டிக்காட்டி சிவசேனா எம்.பி. பிரியங்கா திரிவேதி, ட்விட்டரில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை டேக் செய்திருந்தார்.
ஹிட்ஹப் ஆப்ஸ் மூலம் சல்லிடீல்,புல்லிபாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு, 'டீல் ஆஃப் தி டே' என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம்பெற்றுள்ளது. செயலியின் மூலம் பெண்கள் ஏலம் விடப்படவில்லை என்றாலும், முஸ்லிம் பெண்களை அவதூறு செய்வதை நோக்கமாக வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மும்பை மேற்கு சைபர் போலீஸார் ஐடி பிரிவுச் சட்டம் 153 (ஏ),153 (பி), 295 (ஏ), 354 (டி)509, 500, ஐபிசி 67 ஆகிய பிரிவில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், புல்லிபாய் ஆப்ஸ் தொடர்பாக பெங்களூருரைச் சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவரை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆப்ஸ் தொடர்பாக முதன்முதலில் ட்வீட் செய்தவர்களின் விவரங்களையும் ட்விட்டர் நிறுவனத்திடம் போலீஸார் கோரியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ராகேஷ் அஸ்தானா, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை வரும் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய டெல்லி நகர போலீஸ் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முஸ்லிம் பெண்களின் நலன், பாதுகாப்புக்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முஸ்லிம் பெண்கள் அவதூறு செய்யப்பட்ட விவகாரத்தை நாளேடுகள் மூலம் அறிந்து தாமாக முன்வந்து டெல்லி மகளிர் ஆணையம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டெல்லி காவல் ஆணையர் நேரில் ஆஜராகக் கோரி மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.