இந்தியா

லக்கிம்பூர் கேரி: மத்திய அமைச்சர் மகன் உள்பட 14 பேருக்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அம்மாநில காவல்துறை தாக்கல் செய்துள்ளது.அதில், லக்கிம்பூர் கேரி சம்பவம் ’விபத்து கிடையாது. நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தால் செய்யப்பட்ட கொலை' என்று சிறப்பு புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி காலை வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்தனர். அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில் மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் மகன் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். மொத்தமாக இந்தச் சம்பவங்களில் 8 பேர் வரை உயிரிழந்தனர்.

அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும், இந்தச் சம்பவத்தில் தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதுடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது இந்த வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். குற்றப் பத்திரிகையில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆசிஷ் மிஸ்ரா முதன்மைக் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், லக்கிம்பூர் கேரி சம்பவம் `விபத்து கிடையாது. நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தால் செய்யப்பட்ட கொலை' என்று சிறப்பு புலனாய்வு பிரிவு குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டு இருக்கிறது.

கொலை முயற்சி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. முன்னதாக, 13 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் 14-வது நபராக வீரேந்திர சுக்லா என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 201-ன் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

முன்னதாக, குற்றப்பத்திரிகை தொடர்பாக பேசியுள்ள மூத்த வழக்கறிஞர், ``லக்கிம்பூர் கேரி கலவரம் தொடர்பாக 14 நபர்களுக்கு எதிராக சுமார் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு பிரிவு தாக்கல் செய்துள்ளது. கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே, இன்று இந்த வழக்கு தொடர்பாக, மேலும் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது. குர்பிரீத் சிங் எனப்படும் 22 வயது இளைஞர் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தார். அவரைத்தான் இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT