கோவாவில் பனாஜி நகரில் புத்தாண்டு கொண்டாடிய ஒரு கூட்டத்தினர் குறித்த யூடிப் வீடியோ | படம் உதவி: ட்விட்டர். 
இந்தியா

கோவாவில் சமூக விலகல் இல்லாத புத்தாண்டுக் கொண்டாட்டம்: கரோனா அதிகரிப்பால் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

செய்திப்பிரிவு

பனாஜி: கோவா மாநிலத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் மக்கள் புத்தாண்டு கொண்டாடியதையடுத்து, கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் வரும் 26-ம் தேதிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவாவில் புதிதாக 338 பேருக்குத் தொற்று ஏற்பட்டு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,671 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் அதிகரிப்பால், புதிய கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு ஆகியவற்றை மாநில அரசு விதித்துள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகக் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்தே கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பல்வேறு மாநில மக்கள் வரத் தொடங்கினர். கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு தினத்தன்று பல்வேறு இடங்களிலும் மக்கள் கரோனா அச்சமின்றி, கூட்டம், கூட்டமாகச் சேர்ந்து சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கொண்டாடினர்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குப் பின் கரோனா பாதிப்பு மக்களுக்குத் தெரியத் தொடங்கியுள்ளது. கடந்த இரு நாட்களில் கரோனா பாசிட்டிவ் 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

மாநில கோவிட் தடுப்புக் குழு உறுப்பினர் சேகர் சால்கர் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 26-ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடக்கும். 11,12-ம் வகுப்பு மாணவர்கள் தடுப்பூசி செலுத்தினாலும் பள்ளிக்கு வரத் தேவையில்லை.

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மாநிலத்தில் கரோனா பாசிட்டிவ் 5 சதவீதம் வரும்வரை இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும். கடற்கரை, பப்புகள், கிளப்புகள் போன்றவற்றில் கட்டுப்பாடு கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பையிலிருந்து புத்தாண்டு கொண்டாட கோவா வந்த சொகுசுக் கப்பலில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கரோனா இருப்பது உறுதியானதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது. கார்டிலியா க்ரூஸ் என்ற கப்பலின் பணியாளர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தக் கப்பலில் இருந்த பயணிகளைத் தரையிறங்க கோவா அரசு அனுமதிக்கவில்லை.

இதில் 1471 பயணிகள், 595 ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முடிந்துவிட்டது. முடிவு கிடைத்தபின் கப்பலில் உள்ள பயணிகள் தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது கப்பல் மர்மகோவாவில் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT