இந்தியா

ம.பி.யில் 22 பேர் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

கடந்த 2015 மே 4-ம் தேதி மத்திய பிரதேசத்தின் சட்டாபூரில் இருந்து பன்னாவுக்கு தனியார் பயணிகள் பேருந்து புறப்பட்டது. பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர். ஓட்டுநர் சம்சுதீன் (47) ஆரம்பம் முதலே பேருந்தை அதிவேகமாக இயக்கி உள்ளார். மெதுவாக செல்ல பயணிகள் கூறியும் அவர் கேட்கவில்லை. மால்டா மலைப்பகுதியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 22 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், ஓட்டுநர் சம்சுதீன் வெளியே குதித்து தப்பினார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி பேருந்து உரிமையாளர் கஜேந்திரா பாண்டே, ஒட்டுநர் சம்சுதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்.பி.சோன்கர் விசாரித்தார். சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த வழக்கு விசாரணையில் கடந்த 31-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பேருந்து உரிமையாளர் கஜேந்திர பாண்டேவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஓட்டுநர் சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஒவ்வொரு பயணியின் உயிரிழப்புக்கும் தனித்தனியாக ஓட்டுநருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஓட்டுநர் சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி ஆர்.பி.சோன்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT