புதுடெல்லி: இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் 17.50 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டன, 602 புகார்கள் வந்துள்ளன என்று வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 17 லட்சத்து 59 ஆயிரம் இந்தியக் கணக்குகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த வாட்ஸ்அப் எண்கள் +91 எந்று தொடங்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செய்தித்தொடர்பாளர் வெளியி்ட்ட அறிக்கையில் “ தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் 6-வது மாதமாக நவம்பர் மாத அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம். பயனாளிகளின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை அடங்கிய இந்த அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள், தீர்வுகள், தடை செய்யப்பட்ட கணக்குகள் விவரங்கள்உள்ளன. இந்தியாவில் நவம்பரில் 17.50 லட்சம் கணக்குகள்தடை செய்யப்பட்டன.
தவறான செய்திகளைப் பரப்புதலைத் தடை செய்தல், தகவல் பரிமாற்றங்களை பாதுகாப்பாக வைத்திருத்தலில் வாட்ஸ்அப் அக்கறை காட்டுகிறது. அதற்காக தொடர்ந்து செயற்கை நுண்ணறிவில் அதிகமான முதலீடு செய்து தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகிறோம். புள்ளிவிவர ஆய்வாளர்கள், வல்லுநர்களை பணியமர்த்தியிருக்கிறோம். இவை அனைத்தும் பயனாளிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாகும்” எனத் தெரிவித்துள்ளார்
கடந்த அக்டோபர் மாதம் 500 புகார்கள் பெறப்பட்டன, 20 லட்சம் இந்தியக் கணக்குகள் முடக்கப்பட்டன என வாட்ஸ்அப் தெரிவித்தது.
கடந்த நவம்பரில் பெறப்பட்ட 602 புகாரில் 149 புகார்கள் மேம்பட்ட சேவைக்காகவும், தடை செய்யக்கோரி 357 புகார்களும், பிற தொழில்நுட்பங்களுக்காக 21 புகார்களும், பாதுகாப்பை மேம்படுத்த 27 புகார்களும் வந்தன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.