16 வருடங்களில் 80 வழக்குகளில் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்ட 'எஸ்கேப் கார்த்திக்' 17-வது முறையாக பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவை சேர்த்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கார்த்திக் குமார், பெங்களூருவில் உள்ள கல்யாண் நகரை சேர்ந்தவர். தற்போது 32 வயதான அவர், தன் 16-வது வயதில் இருந்தே திருட ஆரம்பித்துள்ளார். 2005-ம் ஆண்டு பானசவாடி காவல் நிலையத்தில் அவர் மீது நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கர்நாடகாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வழக்குகள் உள்ளன. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி கார்த்திக் குமார் மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நகை, பணம், ஆடம்பர பொருட்கள், வாகனங்களை திருடியது தொடர்பானது. வழிப்பறி, தகராறு உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன.
உணவு வேனில் ஓட்டம்
கடந்த 2008-ம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து உணவு வேனில் ஏறி தப்பினார். 2010-ம் ஆண்டில் அவரை குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்து சென்ற போது, போலீஸ் காவலில் இருந்து தப்பினார். இவ்வாறு அடிக்கடி போலீஸாரிடம் இருந்து தப்பித்ததால் இவர் பெயர், 'எஸ்கேப் கார்த்திக்' ஆனது.
எஸ்கேப் கார்த்திக்கின் உடல்வாகு வலுவாக இருப்பதால் வேகமாக ஓடுவது, சுவர் ஏறி குதிப்பது, வலியை தாங்குவது ஆகிய திறன்கள் கூடுதலாக உள்ளன. அதனால் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதுடன், போலீஸாரிடம் இருந்து தப்பித்தும் ஓடி விடுகிறார்.
ரூ.11 லட்சம் நகை மீட்பு
கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்த போது போலீஸார் அவரை 17-வது முறையாக கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.11 லட்சம்மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.