புதுடெல்லி: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கும் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 10-வது தவணையை பிரதமர் மோடி இன்று விடுவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கரோனா வைரஸால் இந்தியாவின் வேகத்தைத் தடுக்க முடியாது, 2022-ல் நமது வேகத்தை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் “பிரதமர் விவசாயிகள் நிதியுதவி” திட்டத்தின் கீழ் சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா 2,000 ரூபாய் வீதம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 9 தவணைகளில் விவசாயிகளுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது.
10-வது தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது, பிரதமர்மோடி பங்கேற்று 10-வது தவணையை வெளியிட்டார். இந்த 10-வது தவணையில் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.60 லட்சம் கோடி விவசாயிகள் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி 351 விவசாயி தயாரிப்பு அமைப்புகளுக்கு ரூ.14 கோடி நிதியுதவியை வழங்கினார். இதன் மூலம் 1.24 லட்சம் விவசாயிகள் பலன் அடைகின்றனர் அதன்பின் விவசாயிகளிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் குடும்பங்கள், குறிப்பாக சிறு விவசாயிகள், பிரதமரின் கிசான் சம்மன் நிதியின் 10-வது தவணையைப் பெற்றுள்ளனர். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருகிறது. கரோனா வைரஸ் தீவிரமான சவால்களைக் கொண்டுள்ளது. ஆனால் அது இந்தியாவின் வேகத்தைத் தடுக்க முடியாது. 2022-ல், நாம் நமது வேகத்தை மேலும் விரைவுபடுத்த வேண்டும். இந்தியா முழு எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் கோவிட் -19 ஐ எதிர்த்து போராடும். நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படும்”
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.