புதுடெல்லி : 15 முதல் 18 வயதுக்குட்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள கோவின் தளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துவருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரி்க்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்..
இதன்படி 15 முதல் 18வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் தளத்தில் இன்று முதல் தங்கள் விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்யலாம். 2007ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்கள். இவர்கள் கோவின் தளத்திலும் பதிவு செய்யலாம் அல்லது நேரடியாகவும் தடுப்பூசி மையத்துக்குச் சென்று பதிவிடலாம்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அனைத்து தகுதியான மக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்த தயாராகுங்கள். 15 முதல் 18 வயதுள்ளவர்கள் கோவின் தளத்தில் 2022, ஜனவரி 1ம்தேதி முதல் தங்களைப் பதிவு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளது.
15 முதல் 18 வயதுள்ள பிரிவினர் அனைவருக்கும் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படஉள்ளதால், பல்வேறு மாநிலங்களுக்கும் தேவையான அளவு மருந்து மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு முதன் முதலில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதால் தடுப்பூசி செலுத்தியபின் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள். முதல் டோஸ் செலுத்திய 28 நாட்களுக்குப்பின் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும்.
15 முதல் 18 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தத் தனியாக தடுப்பூசி மையத்தை உருவாக்க மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மற்ற வயதினரும் தடுப்பூசி செலுத்த வரும்போது கோவின் தளத்தில் பதிவிடுதலின்போது குழப்பம் நேரிடக்கூடாது என்பதற்காக இந்தப் பிரிவினருக்கு மட்டும் தனி மையம், தனியாக செவிலியர்கள்,தடுப்பூசி செலுத்தும் குழுக்கள், மருத்துவர்களை உருவாக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.