மகாராஷ்டிராவில் 2019 தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
இந்நிலையில், புணேவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவார், ‘‘2019 தேர்தலுக்குப் பின் மகாராஷ்டிராவில் பாஜகவும் தேசியவாத காங்கிரசும் சேர்ந்த கூட்டணி ஆட்சி அமைக்க பிர தமர் மோடி விரும்பினார். அது சாத்தியம் இல்லை என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்’’ என்றார்.
இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, ‘‘ தேர்தலுக்குப் பின் மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தவித்தது. பாஜகவின் முயற்சி வெற்றி பெறவில்லை’’ என்றார்.
தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி தொடர்பாக தேசியவாத காங்கிரசை பாஜக வலியுறுத்தியதாக சரத்பவார் கூறியுள்ளார். பாஜகவின் கோரிக்கையை தேசியவாத காங்கிரஸ் உயர்நிலைக் குழு அப்போது ஆலோசித்தது. இது சாத்தியமில்லை என்று பவார் கூறியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது’’ என்றார்.