மகாராஷ்டிர மாநிலத்தில் 52 வயதுடைய ஒருவர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் வேறு பல உடல்நலக் குறைகளால் இறந்ததாகமாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இந்தியாவில் கட்டுப்பாட்டில் இருந்த கரோனா தொற்று பரவல், கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. இதேபோல் உருமாறிய ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1,270 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் ஒமைக்ரான் பரவல் அதிகமாக காணப்படுகிறது. தற்போது பஞ்சாப், பிஹாரிலும் ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பிம்பிரி சின்ச்வாத் மாநகராட்சியின் யஷ்வந்த் ராவ் சவான் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை 52 வயதுள்ள ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஒமைக்ரான் தொற்றால் நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், மகாராஷ்டிர சுகாதாரத் துறை அந்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘புணேமருத்துவமனையில் உயிரிழந்தவருக்கு ஏற்கெனவே பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளன. அவருக்கு 13 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருந்துள்ளது. மேலும், நைஜீரியாவுக்கு அவர் சென்று வந்துள்ளார். எனவே, கரோனா தொற்று அல்லாத வேறு உடல்நலப் பிரச்சினைகளால்தான் அவர் உயிரிழந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருந்துள்ளதாக தேசிய வைராலஜி நிறுவனமும் பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது. இது தற்செயலாக நடைபெற்றது. இதை ஒமைக்ரான் உயிரிழப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.
மகாராஷ்டிராவில் கடந்த வியாழக்கிழமை மட்டும் 198 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 30 பேர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள். தற்போது அந்த மாநிலத்தில் மொத்தம் 450 பேர் உருமாறிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மகாராஷ்டிராவில் இதுவரை ஒமைக்ரானுக்கு பாதிக்கப்பட்டுள்ள 450 பேரில், 46 சதவீதம் பேர் எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிராவை அடுத்துடெல்லியில் 25 பேர், ஹரியாணாவில் 23 பேர், தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 5 பேர், பிஹார், பஞ்சாபில் தலா ஒருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தற்போது நாட்டில் 24 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 16,764 பேருக்கு கரோனா
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 16,764 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 309 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 7,585 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 3.42 கோடி பேர் குணம் பெற்றுள்ளனர். 220 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4.81 லட்சமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 91,361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. 64 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று 16,000-ஐ தாண்டியுள்ளது.