இந்தியா

பதான்கோட் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வரும் 27-ம் தேதி இந்தியா வருகிறது பாகிஸ்தான் புலனாய்வுக் குழு

செய்திப்பிரிவு

பதான்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தான் கூட்டு புலனாய்வுக் குழுவினர் வரும் 27-ம் தேதி இந்தியாவுக்கு வர இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் பொகாரா நகரில் ‘சார்க்’ உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கவுன்சிலின் 37-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நடுவே சுஷ்மா ஸ்வராஜும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜிஸும் தனியாக சந்தித்துப் பேசினர்.

சுமார் 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, “பதான்கோட் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு பாகிஸ்தான் கூட்டு புலனாய்வுக் குழு இந்தியாவுக்கு வருவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி, வரும் 27-ம் தேதி இரவு இந்தியாவுக்கு வரும் இக்குழுவினர், 28-ல் விசாரணையை தொடங்குவர்” என்றார்.

சர்தாஜ் அஜிஸ் கூறும்போது, “பதான்கோட் விவகாரத்தை இரு நாடுகளும் கையாண்டு வரும் வழிமுறைகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. மேலும் வரும் 31-ம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் நவாஸ் ஷெரீபும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தனியாக சந்தித்துப் பேசுவார்கள்” என்றார்.

ஒருங்கிணைப்பு தேவை

முன்னதாக சார்க் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் தெற் காசியா முன்னிலையில் உள்ளது. ஆனால் தெற்காசிய நாடுகளுக் கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. இந்தப் பிரச்சினையை சரி செய்தால் இன்னும் முன்னேறிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

குறிப்பாக, சார்க் உறுப்பு நாடுகள் தன்னிச்சையாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதன் கூட்டு பலம் பயனுள்ள வகையில் நிரூபிக்கப்படவில்லை. எனவே, தெற்காசிய தாராள வர்த்தக பகுதி (எஸ்ஏஎப்டிஏ) மற்றும் தெற்காசிய வர்த்தக சேவை ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் நமது பொருளாதாரத்தை புதுமையான முறையில் ஒருங்கிணைப்பது குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளோம்.

தெற்காசிய பொருளாதார யூனியன் என்ற அந்தஸ்தை எட்ட வேண்டுமானால், நமது கூட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும். அதற்கு சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பது என்ற முடிவை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT