ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், மக்கள் ஜன நாயகக் கட்சித் (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதன்மூலம் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர் பாக சுமுக உடன்பாடு எட்டப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஜகவும் பிடிபியும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூட்டணி ஆட்சி அமைத்தன. இந் நிலையில், முதல்வர் முப்தி முகமது சையது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மகள் மெகபூபா புதிய முதல்வராக பொறுப்பேற்பார் என தகவல் வெளி யானது. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்றுக்கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டதால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
புதிய அரசு அமைக்க பிடிபி புதிய நிபந்தனை விதிப்பதாகவும் அதை ஏற்க முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் ஆதரவளிக்க தயார் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பிடிபி தலைவர் மெகபூபா நேற்றுமுன்தினம் டெல்லி வந்தடைந்தார்.
நேற்று காலையில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மெகபூபா சந்தித் துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு மெகபூபா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் கடந்த 3 மாதங் களாக இழுபறி நீடித்தது. இது தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசினேன்.
இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வ மானதாகவும் திருப்தி கரமாகவும் இருந்தது. இதற்குமேல் இதுகுறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. அதற்கான இடம் இது அல்ல.
நான் ஸ்ரீநகருக்கு செல்கிறேன். அங்கு வரும் வியாழக்கிழமை கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இதில் பிரதமருடனான சந்திப்பு குறித்து ஆலோசிக்கப்படும். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முறைப்படி அறிவிக்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இழுபறிநிலை முடிவுக்கு வந் துள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “பிரதமரை சந்தித் தாலே ஜம்மு காஷ்மீர் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு இயற்கையாகவே தீர்வு கிடைத்து விடும்” என மெகபூபா பதில் அளித்தார்.
மொத்தம் 87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில், பிடிபிக்கு 27 உறுப் பினர்களும் பாஜகவுக்கு 25 உறுப் பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.