ஆம் ஆத்மி கட்சியின் உயர்நிலை தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அர்விந்த் கெஜ்ரிவால் மீது குற்றம் சாட்டுவதும், உட்கட்சி விவகாரங்களை வெளியில் சொல்வதும் சரியா என்று யோகேந்திர யாதவ் மீது மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சித் தலைமைக்கு எதிராக யோகேந்திர யாதவ் அனுப்பிய இமெயிலுக்கு பதில் அளிக்கும் வகையில் மணீஷ் சிசோடியா அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “கட்சியின் அரசியல் விவகாரக்குழுவின் பரிந்துரைகளை கெஜ்ரிவால் கேட்பதில்லை என்பது உங்கள் குற்றச்சாட்டு.
இதைப் படித்தபோது நான் மிகவும் வியப்படைந்தேன். ஏனென்றால் இந்த நேரம் வரை கெஜ்ரிவால் உங்களுக்கு எதிராகப் பேசவில்லை. எனவே அவர் ஒரு ஜனநாயகவாதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நவீன் ஜெய்ஹிந்தும், அரசியல் விவகாரக் குழுவிலிருந்து யோகேந்திர யாதவும் விலகிய பிறகு அவர்கள் இருவரிடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து சிசோடியா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாதவ், ஜெய்ஹிந்த் ஆகிய இருவரும் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் முறையே குர்கான், ரோடக் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்கள். இதில் யாதவ், கட்சியின் ஹரியாணா பொறுப்பாளராகவும், ஜெய்ஹிந்த் அம்மாநில ஒருங்கிணைப் பாளராகவும் இருந்தனர்.
இந்நிலையில் மணீஷ் சிசோடியா தனது கடிதத்தில், “குர்கான் தொகுதியில் நீங்கள் (யோகேந்திர யாதவ்) போட்டியிட முடிவு செய்தபோது, அரசியல் விவகாரக்குழு தலைவர்கள் அதை எதிர்த்தனர். அப்போது உங்களுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் அவர்களை சமாதானம் செய்தார். ஹரியாணா மாநில பொறுப்பாளராகவும், முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட நீங்கள் விரும்பினீர்கள். அதையும் அரசியல் விவகாரக் குழு தலைவர்கள் எதிர்த்தனர். அப்போதும் கெஜ்ரிவால் உங்களுக்கு ஆதரவாக இருந்தார். அப்போதெல்லாம் அவர் ஒரு ஜனநாயகவாதியாக உங்களுக்குத் தெரிந்தார்.
ஹரியாணாவில் கட்சியின் செயல்பாடு அலங்கோலமாக உள்ளது. உங்களுக்கும் ஜெய் ஹிந்துக்கும் இடையிலான சண்டையை பற்றிதான் தொண்டர்கள் பேசுகின்றனர்.
ஜெய்ஹிந்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீங்கள் கேட்பதை கெஜ்ரிவால் ஏற்காததால் அவர் உங்களுக்கு சர்வாதிகாரியாகத் தெரிகிறார்” என்று குறிப்பிட் டுள்ளார்.