இந்தியா

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து: கர்நாடக பாஜக எம்.பி. மீது வழக்கு

இரா.வினோத்

கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா தொகுதி எம்.பி.யான அனந்த் குமார் ஹெக்டே கடந்த ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது, “இந்துக்கள் அமைதியை யும் அஹிம்சையையும் வலியுறுத்து கிறார்கள். இஸ்லாமியர்கள் தீவிர வாதத்தை வளர்த்தெடுக்கிறார்கள். எனவே இந்த உலகில் இஸ்லாமியர்கள் இருக்கும் வரை தீவிரவாதம் இருக்கும்” என்றார்.

அனந்த் குமார் ஹெக்டேவின் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. மேலும் இஸ்லாமிய அமைப்புகளும் இளைஞர் காங்கிர ஸாரும் போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் உத்தர கன்னடா டிஎஸ்பி பிரசன்னா தேசாய் உத்தரவின் பேரில், அனந்த் குமார் ஹெக்டே மீது இந்திய தண்டனைச் சட்டம் 295-ஏ பிரிவின் கீழ் சிற்சி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அனந்த் குமார் ஹெக்டே தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறும்போது, “இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஊடகங்கள் எனது பேச்சை திரித்து வெளியிட்டுள்ளன. இருப்பினும் எனது பேச்சு இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கட்சி மேலிட உத்தரவின் பேரில் எனது கருத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT