இந்தியா

உத்தராகண்ட் விவகாரம்: குதிரை பேரம் நடத்துவதாக முதல்வர் மீது குற்றச்சாட்டு - ரகசிய வீடியோ சி.டி. வெளியீடு

ஐஏஎன்எஸ், ஏஎன்ஐ

உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக 9 எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் வரும் 28-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு ஆளுநர் கே.கே.பால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த 9 எம்எல்ஏ.க்களுக்கும், “உங்களை ஏன் பதவி நீக்கம் செய்யக் கூடாது என்பதற்கு 26-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சட்டப்பேரவை சபாநாயகர் கோவிந்த் சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏ.க்களில் ஒருவரான ஹரக் சிங் ராவத் ரகசிய வீடியோ பதிவு கொண்ட சி.டி. ஒன்றை நேற்று டெல்லியில் வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 9 பேர் மற்றும் பாஜக எம்எல்ஏ.க்கள் சிலருக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முதல்வர் ஹரிஷ் ராவத் முயற்சி செய்கிறார். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க உத்தராகண்ட் அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியுள்ளோம். மாஃபியாக்களின் ஊழல் அரசான உத்தராகண்ட் அரசை உடனே கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். குடியரசுத் தலைவருக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். உத்தராகண்டில் அரசியல் சாசன நெருக்கடி நிலவுகிறது” என்றார். இவர்கள் வெளியிட்ட வீடியோ எந்த அளவுக்கு உண்மையானது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் குதிரை பேர குற்றச்சாட்டை முதல்வர் ஹரிஷ் ராவத் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று டேராடூனில் கூறும்போது, “அதிருப்தி எம்எல்ஏ ஹரக் சிங் வெளியிட்டுள்ள வீடியோ சி.டி. முற்றிலும் போலியானது. இதன் மூலம் மாநில காங்கிரஸ் அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி நடக்கிறது. அதிகார மோகத்தால் இவர்கள் (9 எம்எல்ஏக்கள்) கலகம் செய்து வருகின்றனர்” என்றார்.

மனு தள்ளுபடி

இதனிடையே சபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

SCROLL FOR NEXT