இந்தியா

திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் நேர்மை: ரூ.40 லட்சம் நகைகள் பக்தரிடம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பாரதி. இவர்கள் தற் போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜேஷ் தம்பதியினர் நேற்று திருப்பதி வந்தனர். அப்போது அலிபிரி வாகன சோதனை சாவடி அருகே அவர்களின் கார் சோதனைக்காக நிறுத்தப்பட்டது. அவர்களது உடைமைகள் தனியாக உள்ள ஓர் அறையில் ஸ்கேன் செய்யப்பட்டன. பின்னர் பாரதி தங்களுடைய உடைமைகளை எடுத்து கொண்டு சென்று விட்டார்.

அப்போது அவர் ஒரு பையை ஸ்கேன் செய்யும் அறையிலேயே மறந்து விட்டார். அந்த பையை கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த தேவஸ்தான உதவி கண்காணிப்பு அதிகாரி ஜகதீஷ்வர், உடனடியாக அந்த பையை திறந்து சோதனையிட்டார். அதில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய் நோட்டுகள், பாஸ்போர்ட் போன்றவை இருந்தன. பின்னர் உடனடியாக ஊழியர்களை அனுப்பி பாரதியை மீண்டும் அலிபிரி சோதனை சாவடி அருகே வரவழைத்தனர். பின்னர் தகுந்த விசாரணைக்குப் பிறகு அவரிடம் நகை பையை அதிகாரி ஜகதீஷ்வர் ஒப்படைத்தார். அதிகாரியின் நேர்மையை பாரதி தம்பதியினர் வெகுவாக பாராட்டினர்.

SCROLL FOR NEXT