திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று காலை 9 மணியளவில் ஆன்லைன் மூலமாக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை வெளியிட்டது. இந்த டிக்கெட்டுகளை பெறும் பக்தர்கள் வரும் ஜனவரி மாதம் சுவாமியை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1-ம் தேதி மற்றும் 13-ம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை தினமும் 20 ஆயிரம் டிக்கெட்களும், ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலும், 23-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரையிலும் தினமும் 12 ஆயிரம் டிக்கெட்களும் நேற்று வெளியிடப்பட்டன. இதன்படி சுமார் 4.60 லட்சம் டிக்கெட்கள் வெறும் 55 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
கடந்த 23-ம் தேதி, காலை 9 மணியளவில் ஜனவரி 1,2 தேதிகளிலும், 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும் மற்றும் 26-ம் தேதியிலும் 5500 சேவா டிக்கெட்களை தேவஸ்தானம் வெளியிட்டது. இதைப் பெற்ற பக்தர்கள் நேரில் குறிப்பிட்ட சேவாவில் பங்கேற்க முடியாவிட்டாலும், ரூ.300 தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதால், இந்த டிக்கெட்களும் உடனடியாக விற்று தீர்ந்தன. இந்நிலையில், ஜனவரி மாத தரிசனத்துக்கான இலவச தரிசன டிக்கெட்கள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.