உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா| கோப்புப்படம் 
இந்தியா

தாய், தாய்மொழி, பிறந்தமண் ஆகியவற்றை மதியுங்கள்: தலைமைநீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தல்

ஏஎன்ஐ


ஹைதராபாத்:பெற்ற தாய், பிறந்த மண், தாய்மொழி ஆகியவற்றை மதிக்க வேண்டும். இவற்றை தாழ்வாக நினைக்கும் மனப்பான்மையை அழிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ராமினேனி அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது.இதில் பாரத் பயோடெக் தடுப்பூசி தயாரிப்பாளர் கிருஷ்ணா இலா உள்ளிட்ட பலருக்கும் விருது வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தெலுங்கு பேசும் மக்களிடம் தங்கள் மாநிலத்தவர் சாதனையை மதிப்பதைவிட, அவரை குறைத்து மதிப்பிடும போக்கு அதிகரித்துவருகிறது. இதுபோன்ற அடிமைத்தனமான மனப்பான்மையை, பழக்கத்தை நீக்க வேண்டும்.

பாரத் பயோடெக் நிறுவனம் கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால், உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியான கோவாக்சின் திறன்மிகுந்தது, புதிய உருமாற்றங்களுக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்படும் என பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆனால், பலரும் இந்த மருந்தை விமர்சித்தனர் ஏனென்றால், இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. சிலர் உலக சுகாதார அமைப்பிலும் புகார் தெரிவித்தனர்.

சில வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய தடுப்பூசி எதிராகவும் செயல்படத் தொடங்கின, கோவிக்சின் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறாமல் இருக்க உள்நாட்டிலேயே பலரும்செயல்படத் தொடங்கினர். ெதலுங்கு தேசத்தின் சகமக்களை மதிப்பது அவசியம். பெற்ற தாய், பிறந்த மண், தாய்மொழி ஆகியவற்றை மதிக்க வேண்டும். தெலுங்குமொழியை வளர்க்க,ஊக்கப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரமணா தெரிவித்தார்

SCROLL FOR NEXT