இந்தியா

75-வது சுதந்திர தினவிழாவின் முக்கியத்துவம் பற்றி ஆலோசனை: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவின் முக்கியத்துவம் பற்றி உள்ளுணர்வோடு ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தேசிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் 2-வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மக்களவைத் தலைவர், மாநிலஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆசாதி கா அம்ரித் மகோத்வ் தொடர்பாக புதன்கிழமை நடந்ததேசிய குழுவின் கூட்டத்தில் நான்பங்கேற்றேன். 75-வது சுதந்திர தினத்தின் முக்கியத்துவம், சுதந்திரத்துக்கு பிந்தைய நாட்டின் மிகவும் முக்கியமான பயணத்தை எப்படி கொண்டாடுவது, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எப்படி மரியாதை செலுத்துவது என்பது குறித்து உள்ளுணர்வோடு ஆலோசனை நடத்தினோம்” என பதிவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கரோனா பெருந்தொற்றால் இந்தியா உட்பட உலக நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தத் தருணத்தில் நாம் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளோம்.

கரோனா பரவல் நமக்கு புதிய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கரோனாவிலிருந்து மீண்ட பிறகு, உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்கும் அளவுக்கு உருவெடுக்க வேண்டும்.

நாட்டின் 100-வது சுதந்திர தின விழா 2047-ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சில இலக்குகளை நிர்ணயிப்பதற்கு இதுவே சரியான தருணம்.இப்போதைய இளைய தலைமுறையினர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் உயர் பதவியில் இருப்பார்கள்.

எனவே, அவர்களுக்கு தங்கள் கடமை குறித்து இப்போது எடுத்துக் கூற வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காக முக்கிய பங்காற்ற முன்வருவார்கள். இளைஞர்கள் தங்கள் கடமையை உணர்வதற்கான விதையை விதைக்கும் களமாக இந்த விழாஅமைய வேண்டும். இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT