வாரணாசி: பசு எங்களுக்குத் தாய் போன்றது, புனிதமானது. ஆனால், சிலருக்குப் பசு எனும் வார்த்தையே குற்றமாகத் தெரிகிறது. பாவம் என்று நினைக்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.
பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க தனது தொகுதியான வாரணாசிக்குச் சென்றார். ரூ.2,095 கோடி மதிப்பிலான 27 திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் உ.பி.யில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. கடந்த 10 நாட்களுக்குள் வாரணாசிக்கு 2-வது முறையாக மோடி இங்கு வந்துள்ளார்.
இதற்கு முன் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தைத் திறந்துவைக்க பிரதமர் மோடி சென்றிருந்தார். ரூ.475 கோடி மதிப்பில் 30 ஏக்கர் பரப்பளவில் நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணைக்கான அடிக்கல்லை பிரமதர் மோடி நாட்டினார். பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி நிலையம், ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் அங்கு நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
''இந்தியாவின் பால்வளத் துறையை வலுப்படுத்துவது இந்த அரசின் முன்னுரிமைகளில் முதன்மையானது. ஆனால், சிலர் பசு மற்றும் கோவர்த்தனைப் பற்றிப் பேசினாலே குற்றமாகப் பார்க்கிறார்கள். பசு என்பது சிலருக்கு குற்றமாகத் தெரிகிறது.
ஆனால், நமக்கு பசு என்பது தாயாகத் தெரிகிறது, பசுவை வைத்தும், எருமைகளை வைத்தும் கிண்டல் கேலி செய்பவர்கள், நாட்டில் உள்ள 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம், அவர்களால் அந்தக் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன என்பதை மறந்துவிட்டார்கள்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இருந்ததோடு இப்போது ஒப்பிடுகையில் நாட்டில் பால் உற்பத்தி 45 விழுக்காடு அதிகரித்துள்ளது. உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 22 சதவீதமாக இருக்கிறது. இந்த தேசத்தில் உ.பி. பால் உற்பத்தியில் மிகப் பெரிய மாநிலம் இல்லை, ஆனாலும்கூட பால்வளத் துறையை விரிவுபடுத்தும்காலம் கண்முன்தான் இருக்கிறது.
வெண்மைப் புரட்சிக்கு புதிய உத்வேகம் தேசத்தில் கிடைக்கும் என்று நம்புகிறேன். பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவை தேசத்தில் விவசாயிகள் நிலையை மாற்ற மிகப்பெரிய பங்களிப்பு செய்யும். இந்த தேசத்தில் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் கூடுதல் வருவாயை வழங்கும் மிகப்பெரிய வழியாக கால்நடை வளர்ப்பு இருக்கிறது. வெளிநாடுகளில் இந்தியாவின் பால்பொருட்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது, வளர்ச்சி அடைய ஏராளமான வாய்ப்பு இருக்கிறது''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.