புதுடெல்லி: அன்னிய நேரடி முதலீடுகள் (எப்டிஐ) வரும் 2022-ம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும். இதற்கு ஏற்ப அரசு தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தொழில்மேம்பாடு மற்றும் உள் வர்த்தகத்துறைச் செயலர் அனுராக் ஜெயின் தெரிவித்தார்.
பிரதமரின் வேக சக்தி திட்டமானது ஒற்றைச் சாளர முறையில் மிக முக்கியமான துறைகளை ஒருங்கிணைத்துள்ளது. இதனால் வரும் 2022-ம் ஆண்டில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவுக்கு வரும் என தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
கரோனா பரவலால் உலக அளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள சூழலில் 2020-21-ம் நிதிஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு8,171 கோடி டாலராகும். இதுநடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல்ஜூலை வரையிலான காலத்தில் 2,737 கோடி டாலர் ஆக உள்ளது.இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62% அதிகம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதிகரித்து வரும் அன்னிய நேரடி முதலீட்டு அளவானது இந்தியா மீது பிற நாடுகள் வைத்துள்ள நம்பகத் தன்மையின் வெளிப்பாடாகும். உலக நாடுகள் அனைத்துமே தங்களுக்கு சாதகமான நாடுகளைத் தான் விரும்புகின்றன. அந்த வகையில் அனைத்து நிலையிலும் சாதகமான சூழல் நிலவுவது இந்தியாவில்தான். இதனால் உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதை விரும்புகின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை அரசு உருவாக்கி வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு நிலவியகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள் ளன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேலானநிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள் ளன. அடிப்படையில் நிலவிய பல்வேறு நிபந்தனைகள், விதிமுறைகள் அனைத்தும் எளிமையாக்கப் பட்டுள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டம், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் அன்னியமுதலீடுகளை ஈர்க்கும் காரணிகளாக அமைந்துள்ளன. இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரையில் மத்திய அரசின் 19 அமைச்சகங்கள் மற்றும் துறைகள், 10 மாநில அரசு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒற்றைச் சாளர முறையில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே விண்ணப்பத்தில் அனுமதி பெற முடியும்.