திருவனந்தபுரம்: கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், எம்எல்ஏவுமான பி.டி. தாமஸ் (71) வேலூரில் நேற்று காலமானார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திரிகக்கராசட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவான பி.டி. தாமஸ், அண்மைக்காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புவேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் காலமானார்.
கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவரான பி.டி. தாமஸ், இளம் வயது முதலே அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் ஆகியபதவிகளையும் அவர் வகித்துள்ளார். கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை சட்டப்பேரவையில் அவர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இந்நிலையில், பி.டி. தாமஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அரசியல் வாதியாக தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர் பி.டி.தாமஸ். அவரது மறைவால் ஒருசிறந்த சட்டப்பேரவை வாதியையும், நிகரற்ற பேச்சாளரையும் கேரளா இழந்துள்ளது” என்றார்.
ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பி.டி. தாமஸ் மரணம்குறித்த செய்தி அறிந்து மிகவும் கவலையுற்றேன். கேரளாவுக்கும், காங்கிரஸுக்கும் அவர் அளித்தபங்களிப்புகளோடு, துடிப்புமிக்க தலைவராகவும், உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் பி.டி.தாமஸ் என்றும் நினைவுக்கூரப்படுவார்” என்றார்.