இந்தியா

உ.பி.யில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 22 முஸ்லிம்கள் உயிரிழந்த சம்பவத்தில் 2 ஆண்டாக எப்ஐஆர் பதிவு செய்யாத போலீஸார்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உ.பி.யில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது 22 முஸ்லிம்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால், 2 ஆண்டுகளாகியும் போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) நாடு முழுவதிலும் எதிர்ப்பும், ஆதரவும் நிலவின. இந்த சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் கரோனா வைரஸ் பரவலால் அந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

உ.பி.யில் சிஏஏ-வுக்கு எதிரான பல போராட்டங்கள் கலவரமாக மாறி போலீஸ் துப்பாக்கிச் சூடு களும் நடைபெற்றன. இவற்றில் 22 முஸ்லிம்கள் இறந்ததாக தெரிகிறது. இதன் மீது உ.பி. காவல் நிலையங்களில் எப்ஐஆர் கூடப் பதிவாகவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கான்பூரை சேர்ந்த ஷெரீப் கான் கூறும்போது, "எனது 30 வயது மகன் ரெய்ஸ் கான் கான்பூரில் 2019, டிசம்பர் 20-ல் நடைபெற்ற போராட்டத்தில் போலீ ஸாரால் சுடப்பட்டு இறந் தான். ஆனால், நிலுவையில் உள்ள எனது புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டப்படுகிறேன்" என்றார்.

ஷெரீப்பை போல மேலும் 21 முஸ்லிம்கள் சிஏஏ போராட்ட கலவரத்தில் போலீஸாரால் சுடப் பட்டு இறந்ததாகப் புகார் உள்ளது. வாரணாசி, ராம்பூர், முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர், சம்பல் மற்றும் பிஜ்னோரில் தலா இருவர், கான்பூரில் 3, மீரட்டில் 5, பெரோஸாபாத்தில் 7 என்ற எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இறந்ததாக புகார்கள் உள்ளன. இதன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படாததை எதிர்த்து உ.பி.யில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பெரோஸாபாத் வழக்கறிஞர் சாகீர் கான் கூறும்போது, “தொடக்கத்தில் இறந்தவர்கள் தொடர்பாக ஐபிசி ஆர் 304 பதிவாகின. நீதிமன்ற தலையீட்டுக்குப் பின் அதில் சிலவற்றை ஐபிசி 302 பிரிவுக்கு மாற்றினர். எனினும், அவர்கள் உயிரிழக்க காரணமான எந்தவொரு போலீஸார் மீதும் இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை" என்று தெரிவித்தார்.

சிஏஏ கலவரங்கள் தொடர்பாக மொத்தம் 833 பேர் மீது உ.பி. காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. சுமார் 100 பேர் அக்கலவரங்களில் படுகாயம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT