இந்தியா

பட்ஜெட் துளிகள்: ‘தூய்மை இந்தியா’வுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு

பிடிஐ, ஐஏஎன்எஸ்

3,000 மருந்து கடைகள்.. டயாலிசிஸ் மையங்கள்

கிராமப்புறங்களில் மருந்து பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க வசதியாக நாடு முழுவதும் 3,000 மருந்து கடைகள் திறக்கப்படும்.

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 3,000 மருந்து கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. பிரதமரின் ஜன் அவுஷாதி யோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இந்த மருந்து கடைகளில் தரமான மருந்துகள் மலிவு விலையில் விற்கப்படும்.

சிறுநீரக கோளாறுக்கு (ரீனல்) டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொள்ள அதிக செலவாகிறது. இதற்கான செலவுகளை செய்ய முடியாமல் ஏழை மக்கள் தவிக்கின்றனர். எனவே ஏழை, எளிய மக்களும் டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ள வசதியாக தேசிய டயாலிசிஸ் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இந்த திட்டத்தின்படி மாவட்டம்தோறும் உள்ள மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இதனால் பெருநகரங்களை நோக்கி பயணிப்பதற்கான பயண செலவும் மக்களுக்கு குறையும். நாடு முழுவதும் குறைந்தபட்சம் 2,000 டயாலிசிஸ் மையங்கள் வரும் ஆண்டில் துவக்கப்படும். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த மையங்கள் அமைக்கப்படும். மேலும் அடிப்படை சுங்கம் மற்றும் கலால் வரியில் இருந்து டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.

‘தூய்மை இந்தியா’வுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியாவுக்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய திட்டமான ‘தூய்மை இந்தியா’ (சுவச் பாரத்) கடந்த 2014, அக்டோபர், 2-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 4,041 பெருநகரங்கள் மற்றும் நகரங்களின் தெருக்கள், சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து அருண் ஜேட்லி கூறும்போது, ‘‘நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என தேசத் தந்தை மகாத்மா காந்தி விருப்பம் கொண்டார். அவரது விருப்பத்தை மனதிற் கொண்டே தூய்மை இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்துக்காக ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஓய்வூதிய நிதிக்கான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்வு

ஓய்வூதிய நிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான ஓராண்டு வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி (பிஎப்), தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்) மற்றும் ஓய்வூதிய நிதி ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான வரி நடைமுறையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎப் தொகையை வெளியில் எடுக்கும்போது அதற்கு வரி விதிக்கப்படும். எனினும் அதில் 40 சதவீத தொகைக்கு வரி விலக்கு வழங்கப்படும். மீதம் உள்ள 60 சதவீத தொகைக்கு மட்டும் வரி விதிக்கப்படும். இந்த நடைமுறை ஓய்வூதிய நிதிக்கும் பொருந்தும்.

SCROLL FOR NEXT