புதுடெல்லி: தமிழ்நாட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.250 கோடி அளவுக்கு அசையா சொத்துகள் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்பண்டு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இந்த நிறுவனம் அதன் அறக்கட்டளைகள் வாயிலாக கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. நெய்வேலி, சென்னை, கோவை, நீலகிரி போன்ற நகரங்களில் உள்ள 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளின் போது, அந்த நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்களால் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகள் அடங்கிய கிளவுட் சர்வர்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர, பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது. இந்த டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்ததில், சிட்பண்டு மற்றும் முதலீடுகள் மூலம் ரொக்கமாக கிடைத்த வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.
கணக்கில் வராத இந்தப் பணம் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்டிருப்பதுடன் சுமார் ரூ.250 கோடி அளவுக்கு அசையா சொத்துக்களை வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது ரூ.12 கோடிக்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதுடன் மேல் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.