புதுடெல்லி: 2021-ம் ஆண்டில் மட்டும் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தகரிக்க மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் இதுபோன்று நடக்கிறது, உயிரிழப்பும் நிகழ்கிறது.
கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பகிரத் சவுத்ரி எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமிக்கதுறையின் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று மக்களவையில் பதில் அளிக்கையில், “கழிவுநீர் அகற்றும் பணியில் இந்த ஆண்டில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா, தமிழகத்தில் தலா 5 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் 4 பேர், குஜராத்தில் 3 பேர், ஹரியாணா, தெலங்கானாவில் தலா 2 பேர், பஞ்சாப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு 19 பேர் உயிரிழந்தனர். 2019-ம் ஆண்டில் 117 பேரும், 2018-ம் ஆண்டில் 70 பேரும், 2017-ம் ஆண்டில் 93 பேரும் உயிரிழந்தனர்.
கழிவுநீர் சுத்தரிக்கும் பணியில் இருந்த 1,416 பணியாளர்களுக்கு சிறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு, சுத்திகரிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 9 மாநிலங்களைச் சேர்ந்த 142 பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. 2018-19்ஆம் ஆண்டில் 24,609 பணியாளர்களுக்கு இயந்திரம் மூலம் சுத்தகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி இதேபோன்ற கேள்விக்கு ராம்தாஸ் அத்வாலே பதில் அளிக்கையில், “கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது நடந்த விபத்துகளில் 321 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், மனிதக் கழிவுகளை அகற்றியபோது உயிரிழந்ததாக எந்த புகாரும் இல்லை.
கழிவுநீர்த் தொட்டிகள், தரநிர்ணய விதிகள் முறைப்படி கட்டவில்லை என்பதால்தான் இந்த விபத்துகள் நடந்துள்ளன. அதிகபட்சமாக 2019-ம் ஆண்டில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். 2020-ம் ஆண்டில் 19 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மனிதர்கள் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.