பெங்களூரு: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் திராவிடப் பல்கலைக்கழகம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இதில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,துளு போன்ற திராவிட மொழித் துறைகளும், திராவிடவியல் தொடர்பான வரலாறு, நாட்டுப்புறவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளும் உள்ளன.
இதனால் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய அரசுகளின் நிதியுதவியுடன் ஆந்திர அரசு பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் திராவிட பல்கலை.யில் உள்ள தமிழ்த் துறைமூடப்படும் அபாயத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்த்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, "தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதியுதவியால் இங்கு தமிழ் எம்.ஏ., எம்.பில், பி.எச்டி ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. எம்.ஏ. படிப்பில் ஓராண்டுக்கு 30 மாணவர்களை அனுமதிக்க முடியும். எம்.ஏ. தமிழ் படிக்க வரும்மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம், கல்விக் கட்டணம், தேர்வுக்கட்டணம், விடுதிக் கட்டணம்,உணவுக் கட்டணம் உட்பட அனைத்தும் இலவசம்.
இந்த பல்கலைக்கழகம் வெளிமாநிலத்தில் இருப்பதாலும், முழு நேர படிப்பாக இருப்பதாலும் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதுதவிர போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதாலும், வெளிமாநிலத்தில் தமிழ் படித்தால் தமிழகத்தில் வேலை கிடைக்குமா? என்ற சந்தேகத்தினாலும் மாணவர்கள் இங்கு சேர்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
தொடக்கத்தில் ஆண்டுக்கு 15 பேர் சேர்ந்த நிலையில் தற்போது மாணவர் எண்ணிக்கை 5-க்கும் கீழே குறைந்துள்ளது. எம்.ஏ. தமிழ் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை இல்லாமல் இருந்தால் தமிழ்த்துறையை மூட வேண்டிய அபாயம் ஏற்படும் எனநிர்வாகம் எச்சரித்துள்ளது. எனவேகுப்பத்துக்கு அருகிலுள்ள பெங்களூரு, கோலார் தங்கவயல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தமாணவர்கள் இங்கு சேர வேண்டும்'' என தெரிவித்தன.
சூழலுக்கு ஏற்ற மாற்றம் தேவை
இதுகுறித்து பெங்களூருவை சேர்ந்த தமிழ் ஆர்வலர் நிலவன் கூறும்போது, "திராவிடப் பல்கலைக்கழகம் பெங்களூரு, கோலார் தங்கவயலுக்கு அருகில் இருப்பதால் அதிகளவில் மாணவர்கள் அங்கு சேர்ந்து படித்தனர். ஆனால் இங்கு மாணவர்கள் கட்டாயம் விடுதியில் தங்க வேண்டும் என வலியுறுத்துவதால் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது.கால சூழலுக்கு ஏற்றவாறு மாணவர்கள் விடுதியில் தங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது'' என்றார்.