புதுடெல்லி: 2014-ம் ஆண்டுக்கு முன்பு அடித்துக் கொலை என்ற வார்த்தையை யாரும் கேள்விப்படவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவில் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு முன்பு ‘அடித்துக் கொலை’ என்ற வார்த்தையையே பொதுமக்களில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்தவுடன் இதுபோன்ற கொலைகள் அதிகரித்துள்ளன" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அமித் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர்.பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பஞ்சாபில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொற்கோயிலில் இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டது மற்றும் சீக்கியகொடியை அவமதித்ததாக இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டது என 2 கொலை சம்பவம் குறித்துபத்திரிக்கையாளர்கள் கேள்விஎழுப்பினர். மேலும், அதுதொடர்பாக ராகுல் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவு குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.இதனால்,கோபமடைந்த ராகுல் பத்திரிக்கையாளர் களை நோக்கி, "அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள். பிரச்சினையை திசை திருப்பாதீர்கள்’ என்றார்.
1984-ல் சீக்கியர் படுகொலை..
இதுகுறித்து பாஜகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறும்போது, “அடித்துக் கொலை செய்யும் கலாச்சாரம் காங்கிரஸ் உடையதுதான். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது சீக்கியர்கள் அடித்துக் கொல்லப்பட்டது எந்த விதத்தில் நியாயம்? அடித்துக் கொலை செய்யும் விவகாரங்களின் தலைவர் ராஜீவ் காந்திதான். 1984-ல் சீக்கியர்களின் படுகொலையை நியாயப் படுத்திப் பேசியவர் அவர்தான்" என்றார்
.- பிடிஐ