புதுடெல்லி: கோவா மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் கர்டோரிம் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துவந்த அலெக்சியோ ரெஜினால்டோ லுரென்கோ நேற்று முன்தினம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர், காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினார். இந்நிலையில், லுரென்கோ நேற்றுகொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணமூல் காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.
கோவாவில் கடந்த 2017-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக இருந்தது. பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய எம்எல்ஏ.க்கள் வெவ்வேறு கட்சிகளுக்குச் சென்றனர். இதனால் காங்கிரசின் பலம் 5 ஆனது. சமீபத்தில் காங்கிரசில் இருந்து 2 எம்எல்ஏ.க்கள் விலகினர். நேற்று முன்தினம் அலெக்சியோ ரெஜினால்டோ லுரென்கோவும் ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 2 ஆக குறைந்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் விலகி வருவது கட்சிக்குப் பின்னடைவை ஏற் படுத்தி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் 8 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கடந்த வாரம் வெளியிட்டது.
அதில் கட்சியின் செயல் தலைவர் லுரென்கோவின் பெயரும் இருந்த நிலையி்ல், அவர் கட்சியில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரசில் சேர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.