இந்தியா

தேர்தல் சட்ட திருத்த மசோதா மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவர்: மத்திய அரசு நம்பிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் சட்ட திருத்த மசோதா மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற் றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பரிசீலித்து தேர்தல் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு நபர் பல்வேறு வாக்காளர் அட்டைகளை பெற்று தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவது பெரும் பிரச்சினையாக நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காணவே வாக்காளர் அட்டையுடன் ஆதார்எண் இணைக்கப்பட உள்ளது.இதன்மூலம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படுவார்கள். ஒரு நபருக்கு ஒரு வாக்காளர் அட்டை என்ற நடைமுறை உறுதி செய்யப்படும்.

சூழ்நிலை காரணமாக ஒரு வாக்காளர் தனது இருப்பிடத்தை மாற்ற நேரிடும்போது, புதிய இடத்தில் அவர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறார். அதேநேரம் பழைய இடத்தில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் நீடிக்கும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கும் வாக்காளர் அட்டை, ஆதார் இணைப்பு முற்றுப்புள்ளி வைக்கும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT