இந்தியா

திரிணமூல் எம்.பி. டெரெக் ஓ பிரையன் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ பிரையன் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் மீதமுள்ள நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வர்மா, ஆர். போரா, ராஜாமணி பாட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பி உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். அதேசமயம் மன்னிப்பு கேட்க முடியாது என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.

இந்த விவகாரத்தை தினந்தோறும் மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். மேலும் வெளிநடப்பும் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ பிரையன் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் மீதமுள்ள நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்த சட்ட எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த போது நாடாளுமன்ற விதிமுறை புத்தகத்தை நாற்காலியில் வீசியதாக குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெரெக் ஓ பிரையன் ‘‘கடந்த முறை நான் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது மத்திய அரசு விவசாயச் சட்டங்களை அமல் செய்ய முயன்றது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இன்று நாடாளுமன்றத்தை கேலி செய்யும் பாஜக, தேர்தல் சட்ட மசோதா 2021 ஐ அமல்படுத்த முயலுகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டேன். இந்த மசோதாவும் விரைவில் ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT