நாடாளுமன்றம் | கோப்புப் படம் 
இந்தியா

கடும் எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவையிலும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

செய்திப்பிரிவு

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே தேர்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் சட்டத்திருத்த மசோதா நேற்று (திங்கள்கிழமை) மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அவசர சட்டத்தின்மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் மற்றும் போலி வாக்காளர்களைத் தடுத்தல், ஆதார் கார்டு - வாக்காளர் அட்டையை இணைத்தல் ஆகியவற்றை பிரதானமாக வைத்து தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

இந்நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்படி அவசர அவசரமாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய காரணம் என்ன என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த மதியம்தான் கூடுதல் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் இந்த மசோதா இடம்பெற்றுள்ளது என்ற குற்றஞ்சாட்டையும் அவர்கள் முன்வைத்தார்கள்.

கடும் அமளிக்கிடையே அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மசோதாக்களில் ஒன்று, பெண்களுக்கு திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

இன்னொரு மசோதாவான தேர்தல் சட்டத் திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா விவாதம் ஏதுமின்றி அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தன.

SCROLL FOR NEXT