பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவரும் ஏழைகளும் அதிக அளவில் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவின்படி குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள மதமாற்ற தடை சட்டத்தை ஆராய்ந்து, சட்ட வரைவை சட்டத்துறை நிபுணர்கள் உருவாக்கினர். இதனை பரிசீலித்த கர்நாடக சட்டத்துறையும் உள்துறையும் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தன.
இந்த சட்டத்தின்படி மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க முடியும். இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் கட்டாய மதமாற்ற சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, “இந்த சட்டத்தின் மூலம் இந்து மக்களை பாதுகாக்க முடியும். மதமாற்றத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இதற்கு பெரும்பான்மை மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விரைவில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படும்” என்றார்.