புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் கட்டுமானம் பணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் லாரிகள் நுழைவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடக் கோரி ஆதித்யநா துபே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின்போது, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரம் ஓரளவுக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் 22-ம் தேதி முதல் கட்டுமானப் பணிகளைச் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
ஆனால், இடைப்பட்ட நாட்களில் காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நடத்தத் தடை விதித்து பின்னர் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
காற்றுதர மேலாண்மை ஆணையம், கடந்த காலத்தில் இருந்த புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து காற்றின் தரம் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டும், காற்றின் தரம் மோசமடையும் வரை காத்திருப்பதற்கு பதிலாக, காற்றின் தரம் மோசமடைவதை எதிர்பார்த்துத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இரு்தது.
இந்தநிலையில் டெல்லியில் காற்றின் தரம் சற்று உயர்ந்துள்ளதால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கட்டுமானம் மற்றும் கட்டங்களை இடிக்கும் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதுபோலவே டெல்லி நகருக்குள் லாரிகள் நுழைவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் காற்றின் தர குழு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. டெல்லியில் மாசு அளவுகளில் முன்னேற்றம் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காற்று தர மேலாண்மை ஆணையம்தெரிவித்துள்ளது. அதேசமயம் தூசி கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.