இந்தியா

பொற்கோயிலுக்குள் நுழைந்து புனித நூல், வாளை எடுக்க முயன்றவர் கொலை: சீக்கிய கொடியை அவமதிக்க முயன்றவரும் கொலை

செய்திப்பிரிவு

அமிர்தசரஸ்: அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் நுழைந்து புனித நூல், புனித வாளை எடுக்க முயன்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில் சீக்கியக் கொடியை அவமதிக்க முயன்ற ஒருவர் நேற்றுஅடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

சீக்கியர்களின் புனிதத் தலமாக விளங்கி வருவது அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலாகும். இந்நிலையில், அமிர்தசரஸில் உள்ளபொற்கோயிலில் நேற்று முன்தினம் மாலை பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது கருவறைக்குள் ஒருவர் அத்துமீறி குதித்ததாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்த புனித வாளை எடுத்துக்கொண்ட அந்த இளைஞர், சீக்கியர்களின் புனித நூலான குருகிரந்த் சாஹிப்பை ஓதிக்கொண்டிருந்த சீக்கிய சமய குருவை நோக்கிச் சென்றார். இதைக் கண்ட பொற்கோயில் நிர்வாககக் குழுவினர், அந்த நபரைப் பிடித்து தங்கள் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், அந்த நபர் கருவறைக்குள் குதித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஆத்திரமடைந்த மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி அடித்து உதைத்துள்ளனர். இதில் அந்த நபர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அமிர்தசரஸ் துணை காவல் ஆணையர் கூறும்போது, ‘‘உயிரிழந்த நபர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவருக்கு 25முதல் 30 வயது இருக்கக் கூடும். அவருடன் எத்தனை பேர் இருந்தனர்? என்பது குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன’’ என்றார்.

மேலும் ஒரு சம்பவம்

இந்நிலையில் பஞ்சாபின் கபுர்தலா மாவட்டம், நிஜாம்பூர் கிராமத்தில், நேற்று அடையாளம் தெரியாத 25 வயது நபர் ஒருவர் அங்குள்ள கோயிலுக்குள் நுழைந்து சீக்கியர்களின் கொடியான நிஷான் சாகிப்பை அகற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் அவரை பிடித்த பக்தர்கள் தனிஅறை ஒன்றில் அடைத்து வைத்துஉதைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு சென்றபோலீஸார் பிடித்து வைக்கப்பட்ட நபரை விடுவிக்கும்படி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், பக்தர்கள் அறையில் அடைத்து வைத்திருந்த நபரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் அங்கும் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங்ரந்தவா கூறும்போது, “பொற்கோயிலுக்குள் நுழைந்த நபர், சுமார் 9 மணி முதல் 10 மணி நேரம் வரைஇருந்துள்ளார். அவர் யாரென்றுதெரியவில்லை. சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் குழுவின் அறிக்கை அரசுக்குக் கிடைக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT