பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

உரிய விலை கிடைக்காததால் சந்தையிலேயே பெட்ரோல் ஊற்றி பயிரைக் கொளுத்திய ம.பி. விவசாயி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: விளைபொருளை விற்கப்போனவருக்கு உரிய விலை கிடைக்காமையால் அப்பயிரை பெட்ரோல் ஊற்றி சந்தையிலேயே கொளுத்தி உள்ளார் ஒரு விவசாயி. இந்த சம்பவம், இன்று மத்தியப்பிரதேசத்தின் மாண்ட்ஸரில் நடைபெற்றுள்ளது.

பழம்பெரும் பசுபதிநாத் கோயில் அமைந்துள்ள இடம் மாண்ட்ஸர். பாஜக ஆளும் ம.பி. மாநிலத்திலுள்ள இதன் விவசாய விளைபொருட்கள் சந்தை உள்ளது.

இதில், தனது நிலத்தில் விளைந்த வெள்ளைப்பூண்டை நல்ல விலைக்கு விற்றுத் திரும்பும் நோக்கத்துடன் இன்று வந்திருந்தார் விவசாயி சங்கர் சிர்பிரா. இந்த சந்தையில் பயிரை தரத்திற்கு ஏற்றவாறு பூண்டு பயிர் ஒரு குவிண்டாலுக்கு ரூ.200 முதல் ரூ.5,000 வரை விற்கப்பட்டிருந்தது.

இதில் தனது தரமான பூண்டு ரூ.5,000 வரை விலைபோகும் எனக் கருதியுள்ளார் விவசாயி சங்கர். ஆனால், அவரது பயிரான இஞ்சி, குவிண்டால் ஒன்றுக்கு வெறும் ரூ.1,100 விலைக்கு விற்பனையானது.

இதனால், மிகவும் மனம் நொந்த விவசாயி சங்கர் தான் கொண்டுவந்த பூண்டின் ஒரு பகுதி பயிரை சந்தையிலேயே பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அருகிலுள்ள உஜ்ஜைன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர் கூறும்போது, ''இந்த பூண்டை விளைவிக்க நான் இதுவரை இரண்டரை லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால், எனக்கு அதன் அசலில் பாதி விலை கூடக் கிடைக்கவில்லை. எத்தனை வருடங்கள் தான் இதுபோன்ற இழப்பை எங்களால் தாங்க முடியும்? ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயிக்காதமையால் தான் இந்த பிரச்சினை. இதன் கோபத்தை நான் நெருப்பு வைத்து கொளுத்தி தீர்த்துக் கொண்டேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.

இவரது நிலையை கேட்டு அங்கிருந்த சில விவசாயிகளும் பயிர் எரியும் நெருப்பை சுற்று நின்று கோஷமிட்டுள்ளனர், இதில், ''ஜெய் ஜவான்! ஜெய் கிஸான்!'', ''பாரத் மாதா கீ ஜெ!'', ''இன்குலாப்! ஜிந்தாபாத்!'' எனக் கோஷமிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மாண்ட்ஸர் சந்தையின் செயலாளரான பர்வத்சிங், அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த நெருப்பு சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லை எனினும், போலீஸாரின் விசாரணை தொடர்கிறது.

SCROLL FOR NEXT