இந்தியா

அரசியலில் 7 நாட்களே அதிகம்; இன்னும் இரண்டரை ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேரும்: சசி தரூர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

அரசியலில் மாற்றம் நிகழ 7 நாட்களே அதிகம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. நிச்சயமாக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்.

ப்ரைட், ப்ரெஜுடிஸ், பண்டிட்ரி (Pride, Prejudice & Punditry') என்ற தனது புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சசி தரூர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

நாட்டில் தற்போது பேச்சு சுதந்திரம் இல்லை. பேச்சு சுதந்திரம் நசுக்கப்படுகிறது. நல்நிர்வாக வாரம் கொண்டாடுவதாக இந்த அரசு சொல்கிறது. ஆனால் எங்கே நல் நிர்வாகம் நடக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாகவே நல் நிர்வாகம் இல்லை. ஆனால், அரசாங்கம் அதற்காக ஒரு விழா எடுப்பது நகைப்புக்குரியது. இது வெறும் அடையாள அரசியல். பாஜகவின் ஆட்சி வெற்று கோஷங்களால் ஆன ஆட்சி. நல் நிர்வாகத்துக்காக ஒரு வார கொண்டாட்டம் தேவையற்றது. ஆண்டில் உள்ள 52 வாரமும் நல் நிர்வாகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை:

"அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை. ஒரு வாரம் அரசியலில் மாற்றம் ஏற்பட அதிகமானது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. அதனால், பாஜகவுக்கு எதிராக வெவ்வேறு குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையும். ஏனெனில் அவர்களில் எண்ணம் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல பாஜகவின் கொள்கைகளை, அரசியலை தோற்கடிக்க வேண்டும் என்பதே" என்று சசி தரூர் கூறினார்.

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதில் திரிணமூல் காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் மீது மம்தா பானர்ஜி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று இல்லவே இல்லை என அண்மையில் அவர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT