இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 120-க்கும் மேல் அதிகரிப்பு: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அதிக தொற்று

செய்திப்பிரிவு

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கர்நாடகாவில் 6, கேரளாவில் 3 மட்டும் மகாராஷ்டிராவில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

ஒமைக்ரான் தொற்று; எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

மகாராஷ்டிரா : 43, டெல்லி: 22, ராஜஸ்தான்: 17, கர்நாடகா: 14, தெலங்கானா: 8, குஜராத்: 7, கேரளா: 11, ஆந்திரப் பிரதேசம்: 1, சண்டிகர்: 1, தமிழ்நாடு: 1, மேற்குவங்கம்: 1 என 11 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.

நேற்று கர்நாடகாவில் அதிகபட்சமாக 6 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் ஒருவர் பிரிட்டனில் இருந்து திரும்பியவர். 5 பேர் தக்‌ஷினா கனடாவில் உள்ள இரண்டு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவர். கேரளாவில் தொற்று உறுதியான இருவரில் ஒருவர் பிரிட்டனில் இருந்து திருவனந்தபுரம் வந்தவர். இன்னொருவர் டான்சானியாவில் இருந்து மலப்புரம் வந்தவர். மகாராஷ்டிராவில் தொற்று உறுதியான 13 வயது சிறுமி மற்றும் அவரது பெற்றோர் உகாண்டாவில் இருந்து வந்தனர்.

இந்தியாவில் முதன் கரோனா தொற்று கர்நாடகாவில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இப்போது நாடு முழுவதும் 126 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

3 நாட்களில் ஒன்றரை மடங்கு அதிகரிப்பு:

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை 113 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி உள்ளது.

இதற்கிடையில், உலக அளவில் கரோனா வைரஸின் பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் கரோனா பரவல் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 93 ஆயிரம் பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இங்கிலாந்து தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டபிள்யூஎச்ஓ வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு 3 நாட்களில் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. எதிர்பார்த்ததை விட இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக கடைப்பிடிக் கவேண்டும். அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அதிக அளவு மக்கள் தொகை உள்ள நாடுகளில் இந்த வகை வைரஸ் வேகமாக பரவுகிறது. எனவே பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான படுக்கை வசதி உள்ளிட்டவற்றை மருத்துவமனைகள் தயார் செய்துகொள்ள வேண்டும்.

பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவில் இந்த வகை வைரஸ் வேகமாக பரவியுள்ளது. அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிப்பது நல்லது. இதற்காக சம்பந்தப்பட்ட நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT