டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் டிஆர்டிஓ மூத்த விஞ்ஞானி ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி காலையில் அறை எண் 102-ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீஸார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) மூத்த விஞ்ஞானி பாரத் பூஷண் கட்டாரியா என்பவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி காவல் துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரோகிணி நீதிமன்ற குண்டு வெடிப்பு தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப் பட்டன. நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்த வழக்குகள், இதற்காக நீதிமன்றம் வந்தவர்கள், நீதிமன்றத்தில் இருந்த சுமார் 1,000 வாகனங்கள் என விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
வெடிகுண்டை தயாரிக்க எளிதில் கிடைக்கும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் டெட்டனேட்டர் மட்டுமே வெடித்துள்ளது. வெடிபொருள் வெடிக்கவில்லை. அது வெடித் திருந்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
வெடிபொருள் வைக்கப் பட்டிருந்த லேப்டாப் பையில் டெல்லியில் குடோன் வைத்தி ருக்கும் மும்பை நிறுவனத்தின் லோகோ இருந்தது. அந்த நிறுவனம் விசாரணைக்கு உதவியது. இதன் அடிப்படையில் டிஆர்டிஓ மூத்த விஞ்ஞானி பாரத் பூஷண் கட்டாரியா கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து குண்டு தயாரிப்பதற்காக பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கட்டாரியாவுக்கும் அவரது அண்டை வீட்டில் வசிக்கும் அமித் பக் ஷி என்ற வழக்கறிஞருக்கும் குடிநீர் சப்ளை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தகராறு ஏற்பட்டு வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அமித் பக் ஷியை கொல்வதற்காக நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிபொருட்களை கட்டாரியா கொண்டு வந்துள்ளார். வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கான ரிமோட் மற்றும் பிற சாதனங்களை ஆன்லைனில் அவர்வாங்கியுள்ளார். அவர் வெடிபொருளை எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு டெல்லி காவல் துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறினார்.