ஹைதராபாத் அருகே உள்ள துண்டிகல் விமானப் படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. 
இந்தியா

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிறிய ஆதாரத்தை கூட விடமாட்டோம்: விமானப்படை தளபதி விவேக்ராம் சவுத்ரி திட்டவட்டம்

என்.மகேஷ்குமார்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ஒரு சிறிய ஆதாரத்தை கூட விட மாட்டோம் என இந்திய விமானப்படை தளபதி விவேக்ராம் சவுத்ரி நேற்று ஹைதராபாத்தில் கூறினார்.

ஹைதராபாத் அருகே மெட்சல் மாவட்டத்தில் உள்ள துண்டிகல் விமானப் படைதளத்தில் பயிற்சியை நிறைவு செய்த விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் விமானப் படை தளபதி விவேக்ராம் சவுத்ரி பேசியதாவது:

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. இது குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெறுகிறது. இக்குழுவில் விமானப் படையின் உயர் அதிகாரிகளும் உள்ளனர். விபத்து குறித்து முழுமையாக தெரியவர இன்னும் சில வாரங்கள் ஆகும். அதற்குள் நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது. ஆனால், சம்பவ இடத்தில் கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துள்ளோம். சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த ஒரு ஆதாரத்தையும் விட மாட்டோம். துல்லியமாக விசாரிப்போம்.

மேற்கு லடாக் பகுதியில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறமை நமக்கு உள்ளது. போர் மீது மட்டுமே கவனம் செலுத்தாமல், தகவல் தொழில்நுட்பம், சைபர் கிரைம் போன்றவற்றால் ஏற்படும் எதிர் விளைவுகள் மீதும் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது ட்ரோன் வழி தாக்குதல் ஒரு சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, முக்கியப் பிரமுகர்களை இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து காப்பது குறித்தும் பிரத்யேக பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு விமானப்படை தளபதி விவேக்ராம் சவுத்ரி பேசினார்.

SCROLL FOR NEXT