இந்தியா

கர்நாடகாவில் சிவாஜி, ராயண்ணா சிலை அவமதிப்பு: பெலகாவி நகரில் பதற்றம் 144 தடை உத்தரவு; 27 பேர் கைது

இரா.வினோத்

கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள சாங்கி டேங்க் பூங்காவில் மராட்டிய மன்னர் சிவாஜி சிலை மீது சிலர் கடந்த வியாழக்கிழமை கறுப்பு மை பூசினர். மராட்டிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சதாசிவ நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை கண்டித்து பெலகாவி மாவட்டத்தில் ஏகி கிரண் மராட்டிய அமைப்பினர் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். இதனிடையே அங் கோலில் உள்ள கனகதாசா காலனியில் சுதந்திர போராட்ட வீரர் சங்கொலி ராயண்ணாவின் சிலை மீது சிலர் கறுப்பு மை பூசினர். இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பெலகாவி, பெங்களூரு, மைசூருஉள்ளிட்ட இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பெலகாவியில் நடந்த போராட்டத்தின் போது கன்னட அமைப்பினருக்கும், மராட்டிய அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட இருந்த நிலையில், போலீஸார் மராட்டிய அமைப்பினர் மீது தடியடி நடத்தினர்.

இதனால் மராட்டிய அமைப் பினர் போலீஸாரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடத்தினர். மேலும் மகாராஷ்டிர எல்லையோர கிராமங்களில் கன்னட கொடியை கொளுத்தி கன்னட பெயர் பலகைகளுக்கும் கறுப்பு மை பூசினர். இதையடுத்து போலீஸார் அடுத்த 48 மணி நேரத்துக்கு பெலகாவி மாவட் டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் லாபத்துக்காக சிலை களை அவமதிப்பதை ஏற்க முடியாது என்று மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார்.

SCROLL FOR NEXT