உத்தராகண்ட் காவல் துறையில் பணியாற்றிய சக்திமான் என்ற குதிரையை தாக்கியதில் அதன் கால் முறிந்தது. இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக சக்திமான் வெள்ளை குதிரை காவல் துறையில் பணியாற்றி வருகிறது. முக்கியமான நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் காவல் துறை அணிவகுப்பில் இந்த குதிரை பங்கேற்று வந்தது. கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி நடந்த மாநிலத்தின் 15-வது நிறுவன நாள் விழா அணிவகுப்பில் சக்திமான் பங்கேற்றது.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி சக்திமான் குதிரையை தாக்கினார். இதனால் கால் முறிந்ததால் சக்திமானால் இனி சொந்த காலில் நிற்பது கடினம் என கூறப்படுகிறது. சக்திமானுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் சக்திமானை பார்வையிட்டுள்ளார். பின்னர் ஜோஷி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் சக்திமானை பார்க்க குவிந்தனர்.
இதுகுறித்து காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் சதாநந்த் டேட் கூறும்போது, “காயமடைந்த குதிரையை பார்ப்பதற்காக அரசியல் தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் காயம் காரணமாக அவதிப்படும் குதிரைக்கு ஓய்வு தேவைப்படுவதால் அதைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பன்ட்நகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் சக்திமானுக்கு ஏற்பட்ட கால் முறிவை ஆய்வு செய்துள்ளனர். பின்னர் எக்ஸ்-ரே உள்ளிட்ட சோதனைகளை செய்து பார்த்துள்ளனர்.
இதற்கிடையே, சக்திமானை தாக்கிய எம்எல்ஏ மீது நேரு காலனி காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விலங்குகள் நல ஆர்வலர் பூஜா பஹுகாந்தி, அரசு ஓட்டுநர் வினோத் குமார் மற்றும் காவலர் ரவீந்தர் சிங் ஆகிய மூவரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா தலைமை செயல் அதிகாரியான பூர்வா ஜோஷிபுரா, சட்டப்பேரவைத் தலைவர் கோவிந்த குன்ஞ்வால், பாஜக தலைவர் அமித் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், “விலங்குகளுக்கு அரசியல் தெரியாது. அவற்றுக்கு வாக்குரிமை கிடையாது. இந்நிலையில் குதிரையை தாக்கிய எம்எல்ஏவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், குதிரையை தாக்கியதாகக் கூறப்படும் பாஜக எம்எல்ஏ ஜோஷிக்கு ஆதரவாக அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான அஜய் பட் கூறும்போது, “குதிரை தாக்கியதில் கட்சித் தொண்டர் காயமடைந்தார்” என கூறி யுள்ளார்.