புதுடெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதை யுடன் தகனம் செய்யப்பட்டது.
குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, வருண் சிங்கின் உடல் அவரது சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட நூற்றுக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், வருண் சிங்கின் உடல் போபாலில் உள்ள பைராஹர் இடுகாட்டுக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டில் இருந்து இடுகாட்டுக்கு செல்லும் வழிநெடுகிலும் அவரது உடலுக்கு பொதுமக்கள் வரிசையாக நின்று பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, முழு ராணுவ மரியாதையுடன் முறைப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். -பிடிஐ